தோழர் செங்கொடி வாழ்க !!


”எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்யறோம். அரசும் போலீசும் நம்ம போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குதே தவிர, நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல. இது தெரிஞ்சும் நாம ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப வெவ்வேறு கோரிக்கைகளுக்காக ஒரே மாதிரி அடையாளப் போராட்டமா நடத்தி, முடிச்சுட்டு போயிடறோம். இதனால யாருக்கு என்ன பயன்? வேற போராட்ட வழிமுறைகளை நாம யோசிச்சா, செயல்படுத்தினா என்ன?”

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!

தோழர் செங்கொடி

கேட்ட செங்கொடியை உற்றுப் பார்த்தார் சந்திரசேகரன். சுருக்கமாக சேகர். செங்கொடிக்கு சித்தப்பா. குழந்தை முதல் அவர்தான் செங்கொடியை பார்த்துப் பார்த்து வளர்த்தார். 10 வயதில் தன் அப்பாவை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்து அவருக்கு சிறைத்தண்டனை வாங்கிக் கொடுத்த அந்த விநாடி முதல், இதோ 21 வயது இளம் பெண்ணாக வளர்ந்திருக்கும் இந்த நொடி வரை, செங்கொடிக்கு எல்லாமும் சித்தப்பாதான். சகலமும் ‘மக்கள் மன்றம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம்தான். செங்கொடியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் சேகருக்கு முழுமையாகத் தெரியும். அதனாலேயே செங்கொடி கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தார். காரணம், இதே கேள்விக்கான விடையைத் தேடிதான் அவரும் பல ஆண்டுகளாக மனதளவில் போராடிக் கொண்டிருக்கிறார்.

அவர்கள் இருவரும் ஆகஸ்ட் 26-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் கை கோர்த்த படி கலந்து கொண்டனர். இதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை இந்திய குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. இதனையடுத்து மூவரும் செப்டம்பர் 9-ம் தேதி அன்று தூக்கில் இடப்படுவார்கள் என்று சிறை அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள்.

இதனை எதிர்த்துதான் அந்த மனிதசங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில்தான் இருவரும் கலந்துக் கொண்டிருந்தார்கள். செங்கொடி கேட்ட கேள்விக்கு ஒருவேளை சற்றுத் தள்ளி கைகோர்த்தபடி நின்றிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி விடையளிக்கலாம் என்ற ஆர்வத்தில் சேகர் எட்டிப் பார்த்தார். முழக்கங்கள் எழுப்புவதில் மும்முரமாக இருந்த வைகோ, இவர்களை கவனிக்கவில்லை. சரி என்று சேகரும் அமைதியாகிவிட்டார்.
தோழர் செங்கொடியின் இறுதி கடிதம்

தோழர் செங்கொடியின் இறுதி கடிதம்

ஆனால், செங்கொடி அமைதியடையவில்லை என்பதும், அவருக்குள் எழுந்த கேள்விக்கான பதிலை அடுத்த இரண்டு நாட்களில் அவரே கண்டடைவார் என்பதும், தனக்கு சரியென்று பட்ட அந்த விடையை தன் உயிரைப் பணயம் வைத்து உலகுக்கு தெரிவிப்பார் என்பதும், சித்தப்பா சேகர் அறிந்திருக்கவில்லை.

சரியாக ஆகஸ்ட் 28-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்னால் செங்கொடி தன்னைத்தானே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டார். துடி துடித்து இறக்கும் கடைசி நொடி வரை, ‘மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரும் அப்பாவிகள்… அவர்களை விடுதலை செய்…’ என்று முழக்கமிட்டபடியே உயிர் துறந்தார்.

‘தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.

இப்படிக்கு

தோழர் செங்கொடி‘

என்று அவரால் எழுதப்பட்ட கடிதம் அனைவரையும் படிக்கச் சொல்லி படபடத்துக் கொண்டிருந்தது.

ஜன் லோக்பால் மசோதா கோரி 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசாரே, தனது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அன்று காலை 10 மணியளவில்தான் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டிருந்தார். அதே தினத்தின் மாலையில்தான், தமிழக மக்களின் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளாத அரசை கண்டித்து செங்கொடி தன்னைத்தானே எரித்துக் கொண்டார்.

______________________________________

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!”இப்படி அவ செய்வானு நாங்க நினைச்சே பார்க்கலீங்க…” காஞ்சிபுர மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் கட்டடத்தை வெறித்துப் பார்த்தபடியே பேச ஆரம்பித்தார் சேகர். நள்ளிரவின் அடையாளம் அந்த மருத்துவமனைக்கு நூறடி தள்ளித்தான் தெரிந்ததே தவிர, பிரேத பரிசோதனை கிடங்கின் வாசல் முழுக்க உக்கிரத்தின் வெளிச்சம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

”பதினொரு வருஷங்களுக்கு முன்னாடி, இதோ இந்த ஆஸ்பத்திரி வாசல்லதான் சரஸ்வதி அழுதுகிட்டு நின்னா. தப்புத் தப்பு செங்கொடினு கூப்பிட்டாதான் அவளுக்கு பிடிக்கும். சரஸ்வதிங்கிற தன் பேரையே அவ மறந்துட்டா. காரணம், அந்தப் பேரை வைச்சது அவ அப்பா.

ஓரிக்கை கிராமத்த சேர்ந்தவங்க நாங்க. எங்கண்ணன் பேரு பரசுராமன். செங்கொடிக்கு தங்கச்சியும், தம்பியும் பொறந்ததும் அவங்கம்மா இறந்துட்டாங்க. உடனே எங்கண்ணன் ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டாரு. ஆனா, சும்மா சொல்லக் கூடாது, வந்த மகராசி செங்கொடியையும் அவ தம்பி, தங்கச்சியையும் தன் கொழந்தைங்க போலவே பார்த்துகிட்டா. அதனாலயே செங்கொடி அந்த மகராசியை ‘சித்தி’னு கூப்பிட மாட்டா. ‘அம்மா’னுதான் வாய் நிறைய கூப்பிடுவா.

எங்கண்ணன் கூலித் தொழிலாளிங்க. நாடாறு மாசம், காடாறு மாசம்னு கிடைச்ச வேலைய செய்துட்டு இருப்பாரு. பல நேரம் வேலையே இல்லாம சும்மாவும் இருப்பாரு. சுபாவத்துல நல்லவரு. ஆனா, அதிகம் குடிப்பாரு. அதனாலயே அப்பப்ப அவருக்கு கிறுக்கு பிடிச்சுக்கும். தன் ரெண்டாவது பொண்டாட்டிய, செங்கொடிய, அவ தம்பி, தங்கச்சிய அது மாதிரி நேரத்துல அடிப்பாரு. தன்னை அடிக்கிறத கூட அந்த மகராசி தாங்கிட்டா. ஆனா, தன்னோட கொழந்தைங்களா நினைக்கிற மூத்தா தாரத்து பசங்களை எங்கண்ணன் அடிக்கிறதை அவங்களால தாங்கிக்க முடியலை.

ஒருநாள் இத தட்டிக் கேட்டாங்க. உடனே எங்கண்ணன், அந்த மகராசி மேல கெரசின் ஊத்தி கொளுத்திட்டாரு. அதிர்ந்து போய் செங்கொடியும், அவ தங்கச்சியும் இத பார்த்துட்டு நின்னாங்க. செங்கொடி சுதாகரிக்கறதுக்குள்ள அவ தங்கச்சி, ‘அம்மா’னு கத்திகிட்டே போய் அந்த மகராசிய கட்டிப் பிடிச்சிகிட்டா. இதைப் பார்த்த செங்கொடி அழுது கூச்சல் போட்டா. அக்கம் பக்கத்துல இருந்தவங்க ஓடி வந்து நெருப்பை அணைச்சு ரெண்டு பேரையும் இதோ, இதே ஆஸ்பத்திரிக்குத்தான் கூட்டிட்டு வந்தாங்க.

கடைசில செங்கொடியோட தங்கச்சியதான் காப்பாத்த முடிஞ்சுது. ‘அம்மா’னு அவ பாசமா கூப்பிட்ட அந்த மகராசிய காப்பாத்த முடியலை. சொன்னா நம்ப மாட்டீங்க. 10 வயசு பொண்ணா, தைரியமா, செங்கொடி அவ அப்பாவ போலீஸ்ல பிடிச்சு கொடுத்தா.

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!‘மக்கள் மன்றம்’ அமைப்போட நான் ஆரம்பத்துலேந்தே தொடர்புல இருக்கேன். என் மூலமா செங்கொடிக்கும் அந்த மன்றத்தோட பழக்கம் உண்டு. அதனால நேரா அவ மன்றத்துக்கு வந்து தங்க ஆரம்பிச்சா. நாலு வருஷம் எங்கண்ணன் வேலூர் ஜெயில்ல இருந்துட்டு திரும்பி வந்தாரு. ஆனா, செங்கொடி அவரை மன்னிக்கவும் இல்ல… ஏத்துக்கவும் இல்ல. இந்த 11 வருஷங்களா தன் அப்பாகிட்ட ஒரு வார்த்த கூட அவ பேசலைனா பார்த்துக்குங்க…

அவள நினைச்சு நான் ரொம்ப பெருமை படுவேன். ஆனா, அவ ‘அம்மா’வ நெருப்புக்கு பறிகொடுத்துட்டு எந்த இடத்துல நின்னு அழுதாளோ… அதே இடத்துல அதே மாதிரி எரிஞ்சு கரிக்கட்டையான அவள பார்த்து நான் அழுவேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலைங்க…” கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்குமாக தத்தளித்தபடி அழுத சேகர், சட்டென்று மேற்கொண்டு பேச முடியாமல் கதற ஆரம்பித்தார்.

காவல்துறையின் சைரன் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்று ஒலி எழுப்பியபடி யாராவது பிரச்னை செய்கிறார்களா என்று பார்த்துவிட்டு நகர்ந்தது. ஆங்காங்கே சிதறியிருந்த நான்கைந்து காவலர்கள் அந்த இருட்டிலும் கண்ணாடி மூடப்பட்ட வாகனத்தை பார்த்து விறைப்பாக சல்யூட் அடித்தார்கள்.
தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!

ஆற்றாமையில் காஞ்சி மக்கள் மன்றத்தினர்

__________________________________
தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!

தோழர் மகேஷ்

”இருளர் சமுதாயத்துக்கு எப்படியாவது கல்வி அறிவு கொடுத்து அவங்களை முன்னேற்றணும்ங்கிறதுனுதாங்க என்னோட லட்சியம். அதுக்காகத்தான் கீழ்கதிர்பூர் கிராமத்துல ‘மக்கள் மன்ற’த்தை நடத்திகிட்டு இருக்கேன்…” நடந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் விலகாததால், மகேஷின் (மக்கள் மன்றத்தின் அமைப்பாளர், பெண்) குரல் கம்மியிருந்தது.

”காஞ்சிபுரம் மாவட்டத்துல இருளர் இன மக்கள் அதிகம். அதுல பெரும்பாலானவங்க அவங்க குழந்தைங்களோட செங்கல் சூளைல கொத்தடிமையா இருந்தாங்க. நாங்கதான் பெரிய அளவுல போராட்டம் நடத்தி அவங்கள எல்லாம் மீட்டோம். இதுக்காக சுத்து வட்டாரத்துல இருக்கிற கிராமங்களுக்கு போய் தொடர்ந்து பிரச்சாரம் செய்வோம்.

அப்படித்தான் ஓரிக்கை கிராமத்துக்கு நாங்க போயிருந்தப்ப செங்கொடி எங்களுக்கு அறிமுகமானா. அப்ப அவ 5வது படிச்சுட்டு இருந்தா. ரொம்ப சூட்டிகையான பொண்ணு. அதே நேரத்துல நிறைய கேள்விகள் கேட்டுகிட்டே இருப்பா. எல்லாமே அறிவியல் தொடர்பா இருக்கும். இந்தப் பொண்ணை நல்லா வளர்த்து ஆளாக்கணும்னு நாங்க மன்றத்துல பேசுவோம்.

இந்த நேரத்துலதான் செங்கொடியோட சித்தி இறந்து போனாங்க. அதுக்கு காரணம் அவ அப்பாங்கிறதால திரும்ப அவ தன்னோட கிராமத்துக்கு போக விரும்பலை. நேரா இங்க வந்துட்டா. எங்க அமைப்பை சேர்ந்தவங்கதான் அவள எங்க பொண்ணு மாதிரி வளர்த்தோம்.

ரொம்ப சாப்ட் டைப். அதே சமயத்துல ரிசர்வ்ட் டைப்பும் கூட. அவளுக்கு எழுத, படிக்கத் தெரியுங்கறதால எங்க கிட்ட வந்ததும் நாங்க வைச்சிருக்கிற புத்தகங்களை எடுத்து, புரியுதோ, புரியலையோ படிப்பா. சந்தேகத்தை கேப்பா. அவள தொடர்ந்து ஸ்கூலுக்கு அனுப்ப நாங்க முடிவு செஞ்சோம். ஆனா, தீர்மானமா பள்ளிக்கு போகறதை மறுத்துட்டா. இங்கேந்தே படிக்கிறேன்னு சொல்லிட்டா. வற்புறுத்தி பார்த்த நாங்க, அவ போக்குலயே விட்டுட்டோம். ஆனா, பிரைவேட்டா அவள படிக்க வைக்கிறதை மட்டும் நாங்க நிறுத்தலை.

எங்க கூடவே நாங்க கிராமங்கள்ல பிரச்சாரம் பண்ண போறப்ப வருவா. ‘நம்ம சமுதாயம் முன்னேறணும்னா நாம எல்லாம் படிக்கணும்’னு தன்னை விட வயசு குறைஞ்சவங்ககிட்ட பக்குவமா எடுத்து சொல்லுவா. வார இறுதில படிக்கிற பசங்களுக்கு நாங்க டியூஷன் மாதிரி எடுப்போம். அப்ப சொல்லிக் கொடுக்கறதுல முதல் ஆளா செங்கொடிதான் வந்து நிப்பா.

அவளுக்கு இசையில ஆர்வம் அதிகம். பறைய எடுத்து அடிக்க ஆரம்பிச்சானா, இன்னிக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாம். எப்படிப்பட்ட வலு உள்ளவங்களும் ஒரு மணி நேரத்துக்கு மேல பறை அடிக்க மாட்டாங்க. கை வலிக்கும். ஆனா, செங்கொடி தொடர்ந்து பல மணி நேரங்கள் விடாம பறையடிப்பா. எங்களுக்கே அதை பார்க்க ஆச்சரியமா இருக்கும்.

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!இப்படி கலை மூலமா பிரச்சாரம் செய்யறது அவளுக்கு பிடிக்கும். அதனால மனமுவந்து அவ இதை செய்வா. ‘சென்னை சங்கமம்’ல அவளோட நிகழ்ச்சி நடந்திருக்கு. எந்நேரமும் புத்தகமும் கையுமா இருப்பா. ‘இவர்தான் லெனின்’ நூல் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். குறைஞ்சது முப்பது முறையாவது அந்த நூலை படிச்சிருப்பா. அதை மனப்பாடமா ஒப்பிப்பா. ஆனா, அர்த்தம் புரிஞ்சுதான் அவ அப்படி செய்வா.

சேகுவேரா, நெல்சன் மண்டேலா, தந்தை பெரியார், பகத்சிங் நூல்கள்னா அவளுக்கு அவ்வளவு விருப்பம். இவங்களோட புகழ்பெற்ற வாசகங்களை அப்படியே அந்தந்த நேரத்துக்கு எது சரியா இருக்குமோ அப்ப சொல்லுவா.

‘உலகத்தின் எந்த மூலையில் அநீதி நடந்தாலும், அந்த அநீதியை எதிர்த்து எவர் ஒருவர் போராடுகிறாரோ, அவரும் சே-வும் தோழரே…’ங்கிற சேகுவேராவோட வாசகம் செங்கொடிக்கு அவ்வளவு பிடிக்கும்.

ஒருமுறை ஒருத்தர் செங்கொடிகிட்ட… ‘ஏம்மா, படிப்புல இவ்வளவு ஆர்வம் காட்டறியே… பேசாம தபால்ல டிகிரி படி’னு சொன்னாரு. அதுக்கு யோசிக்காம செங்கொடி சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘நான் மக்களை படிக்கறேன். இதுதான் இருக்கிற கல்வியிலயே உயர்ந்த கல்வி. எந்த டிகிரியும் இதுக்கு ஈடாகாது. இந்தப் படிப்பு எனக்கு போதும்…’

இப்படிதான் செங்கொடி, இருந்தா… வாழ்ந்தா. இதுக்காகவே நாங்க நடத்தற அத்தனை ஆர்ப்பாட்டம், போராட்டங்கள்லயும் கலந்துகிட்டா. பத்து நாட்கள், இருபது நாட்கள், ஏன் 60 நாட்கள் கூட இதுக்காக சிறைல எங்களோட இருந்திருக்கா. புழல், வேலூர்னு செங்கொடி பார்க்காத சிறை இல்ல.

பாரதிதாசன் பாடல்கள அவ்வளவு அழகா, உணர்வோட பாடுவா. 2009- மேக்கு பிறகு அவ அதிகம் பாடி ஆடினது, ‘களத்திலிருக்கும் அம்மாவுக்கு கடிதம் எழுதுகிறேன்…’, ‘இமயத்தின் சிகரத்திலே எங்கள் விடுதலையின் முழக்கங்கள்…’
தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!

மக்கள் மன்ற குழந்தைகளுடன்

பொதுவா நாங்க இணையத்துல வினவு, கீற்று போன்ற தளங்கள்ள சமூக நிலமைகள் சார்ந்து எழுதப்படற கட்டுரைகளோட பிரிண்ட் அவுட் எடுத்து அதை படிச்சுட்டு விவாதிப்போம். அந்த விவாதங்கள் எல்லாத்துலயும் செங்கொடி பங்கேற்பா. தவறாம தன்னோட கருத்து, விமர்சனத்தை முன் வைப்பா. ஆனா, எந்தச் சூழ்நிலைலயும் நாங்க, தனி நபர் போராட்டத்தையோ அல்லது சமூக நிலை சார்ந்த தற்கொலை முயற்சியையோ ஆதரிச்சதில்ல. அவ்வளவு ஏன், செங்கொடி கூட தன்னோட கருத்தை முன்வைக்கும்போது இதைப் பத்தி பேசினதும் இல்ல. ஆதரிச்சதும் இல்ல.

முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு பிறகு அவ ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டா. அதுக்கு பிறகு தொடர்ச்சியா ஈழம் தொடர்பா படிக்கறது, காணொளிகளை பார்க்கறதுனு இருந்தா. ராஜீவ்காந்தி கொலை வழக்குல குற்றம் சாட்டப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தனோட கருணை மனுக்கள் ஜனாதிபதியால நிராகரிக்கப்பட்டதும் நிலை கொள்ளாம தவிச்சா. அவங்க மூணு பேரையும் எப்படியாவது காப்பாத்தணும்னு சொல்லிகிட்டே இருந்தா. அவங்களுக்காக நடந்த அத்தனை ஆர்ப்பாட்டம், போராட்டத்துலயும் கலந்துகிட்டா.

பைக் ரேலி வேலூருக்கு போனப்ப செங்கொடியும் வந்தா. ஆனா, இயக்கம் சார்பா ஒருத்தர்தான் சிறைக்குள்ள போய் அவங்க மூணுபேரையும் பார்க்க முடியும்னு நிலை இருந்ததால என்னை உள்ள அனுப்பிட்டு அவ வேலூர் சிறைக்கு வெளிலயே காத்திருந்தா. நான் திரும்பி வந்ததும் ‘அவங்க மூணு பேரும் எப்படி இருக்காங்க… மன உறுதி எப்படி இருக்கு’னு துருவித் துருவி கேட்டா.

சென்னை கோயம்பேடுல வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருக்கறதை கேள்விப்பட்டதும் அங்க போகணும்னு துடிச்சா. ஆனா, படிக்கற பசங்களுக்கு பாடம் சொல்லித் தர வேலை இருந்ததால அவள நாளைக்கி (ஆகஸ்ட் 29, திங்கள்கிழமை) கூட்டிட்டு போறதா சொல்லியிருந்தோம்…”

அதற்கு மேல் பேச முடியாமல் பல நிமிடங்களுக்கு அழுத மகேஷ், சற்றே நிதானப்பட்டதும் தொடர்ந்தார்.

”சனிக்கிழமை அன்னிக்கி நளினி – முருகனோட மக, அரித்ராவோட குரலை டிவில கேட்டா. அதுக்கு அப்புறம் அவ தன்னோட வசத்துலயே இல்ல. ’21 வருஷங்கள்ல ஒரேயொருமுறைதான் தன் அப்பா – அம்மாவ அரித்ரா பார்த்திருக்காளா?’னு திரும்பத் திரும்ப கேட்டா.

முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தப்ப முத்துக்குமார் தன்னைத்தானே எரிச்சுகிட்டது செங்கொடி மனசுல ஆழமான தழும்பா பதிஞ்சு போச்சு. முத்துக்குமாரோட இறுதி ஊர்வலத்துல கூட எங்களோட கலந்துகிட்டா. அரித்ராவோட குரல், அவளோட தழும்பை கீறி விட்டா மாதிரி இருந்திருக்கணும். ஒரு மாதிரி மவுனமாவே இருந்தா. நாங்க அவளுக்கு உடம்புதான் சரியில்லை போலனு கோயம்பேடு உண்ணாவிரதத்துக்கு இன்னிக்கி (ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 28) காலைல கிளம்பி போனோம்.

மாலை 5 மணி போல திரும்பி வந்த எங்களுக்கு செங்கோடிய காணாதது முதல்ல பெரிசா தெரியலை. ஏன்னா, அவ பக்கத்துல இருக்கிற முந்திரிதோப்புக்கு அடிக்கடி போய் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பா. அதுமாதிரி போயிருக்கா போலனு நினைச்சோம்.

ஆனா, டிவிஎஸ் 50 எக்ஸ்எல் வண்டி, வழக்கமா நிக்கிற இடத்துல இல்ல. அலுவலகத்துல இருந்த பிள்ளைகளும் செங்கொடி அக்காவ ரொம்ப நேரமா காணும்னு சொன்னாங்க. அப்படியே உடம்பெல்லாம் பதறிடுச்சு. முந்திரிதோப்புக்கு வண்டில போக மாட்டா. அதனால நாங்க எல்லாரும் நாலா பக்கமும் சிதறி செங்கொடிய தேடினோம்.

அப்பத்தான்…”

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!

தோழர் செங்கொடி சடலமாக

வார்த்தைகள் தடைப்பட, குரல் மேலும் உள்ளிரங்க வெடித்து அழுதார் மகேஷ்.

அவர் விட்ட இடத்திலிருந்து சில நிமிடங்களுக்கு பிறகு மேகலா தொடர்ந்தார். ”அப்பதான் தாலுகா ஆபீஸ்ல ஒரு பொண்ணு தன்னைத்தானே எரிச்சுகிட்டதா ஃபோன் வந்தது. பதறிப் போய் ஜி.எச்.சுக்கு ஓடினோம். அது செங்கொடிதான்னு அடையாளம் தெரிஞ்சதும் அப்படியே நாங்க நொறுங்கிட்டோம்.

தாலுகா ஆபீஸ் இருக்கிற வளாகத்துலயேதான் தீயணைப்பு நிலையமும் இருக்கு. ஆனா, எங்க தன்னோட போராட்டத்தை அணைச்சுடப் போறாங்களோனு மண்ணெண்ணெய்க்கு பதிலா பெட்ரோலை செங்கொடி பயன்படுத்தியிருக்கா. இதுக்காக தாலுகா ஆபீஸ் பக்கத்துல இருக்கிற ‘வினாயகா பெட்ரோல் பங்க்’ல பாட்டில்ல வாங்கியிருக்கா.

மக்கள்கிட்டேந்துதான் பாடம் படிக்கணும்னு சொல்லிகிட்டு இருந்தவ எதனால இப்படியொரு முடிவு எடுத்தானு தெரியல…” மேகலாவாலும் அதன் பிறகு பேச முடியவில்லை. திருமாவளவன், வைகோ, கொளத்தூர் மணி… என அடுத்தடுத்து தலைவர்கள் மகேஷை பார்ப்பதற்காக வந்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த களேபரத்தில் இன்று காலை 7 மணி அளவில் கலைந்த உடைகளுடன் வந்து சேர்ந்த ஒரு பெரியவர், மருத்துவமனையின் வாசலிலேயே அமர்ந்துவிட்டதை யாரும் கவனிக்கவில்லை.

செங்கொடியின் கடிதத்தை நகலெடுத்து அனைவருக்கும் விநியோகித்துக் கொண்டிருந்தவர்கள், அந்தப் பெரியவரின் கரங்களிலும் ஒரு நகலை திணித்துவிட்டு சென்றார்கள். அதில் எழுதப்பட்ட வாசகங்களையே உற்றுப் பார்த்த அந்தப் பெரியவர் அழுத்தம் திருத்தமாக சொன்னார்:

”உணர்ச்சிவசப்பட்டு எதுக்காக இளைஞர்கள் இப்படியொரு காரியத்தை செய்யறாங்க? இதனால யாருக்கு லாபம்? போராடறதுக்கு இதுவா வழி? எனக்கு வயசாகிடுச்சு. இல்லைனா மக்களை திரட்டி கைல துப்பாக்கிய எடுத்திருப்பேன்…”

‘அடையாளப் போராட்டத்துக்கு பதிலா வேறு போராட்ட வழிமுறையே இல்லையா…’ என்று தன் சித்தப்பாவிடம் கேள்வி கேட்ட செங்கொடி, இந்தப் பெரியவர் சொன்ன பதிலை குறித்தும் யோசிக்க வழியின்றி சாம்பலாகிவிட்டார்.

எந்த முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை தட்டி எழுப்பியதை போல் தன் உடலும் மூன்று தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படட்டும் என்று நம்பிக்கையுடன் செங்கொடியை அழுத்தம்திருத்தமாக எழுத வைத்ததோ -அந்த முத்துக்குமாரின் அப்பாதான் அந்தப் பெரியவர் என்பதை சூழ்ந்திருக்கும் தலைவர்களை கடந்து யாரால் செங்கொடியிடம் இப்போது சொல்ல முடியும்?

அரசியலற்ற அமைதியிலும், விரக்தியிலும், நம்பிக்கையின்மையிலும் மூழகடிக்கப்பட்டிருந்த தமிழகத்தை தனது தீக்குளிப்பினால் இரு ஆண்டுகளுக்கு முன்னர் தட்டி எழுப்பினார் முத்துக்குமார். இன்றும் அதே நிலமையைக் காண்கிறோம். மூவர் தூக்கை நிறுத்தமளவு நம்பிக்கையூட்டும் போராட்டங்களும், அரசியல் முழக்கங்களும் தமிழகத்தை பற்றியிருந்தால் செங்கொடி தீக்குளிக்க நேர்ந்திருக்காது. அந்த வகையில் செங்கொடி தன் மீது ஊற்றிய பெட்ரோலுடன் இன்னும் விழித்தெழாத தமிழகத்தின் அரசியலற்ற கோழைத்தனமும் சேர்ந்திருக்கிறது.

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!செங்கொடியின் உடலை வேண்டுமானால் பெட்ரோல் எரித்திருக்கலாம். ஆனால் அந்த இளம்பெண்ணின் உள்ளத்தை மொன்னையான தமிழக அரசியல் சூழல்தான் எரித்திருக்கிறது. ஆகவே இது வெறுமனே தீக்குளிப்பினால் நடந்த தற்கொலை மட்டுமல்ல. சரியான திசைவழியில் போராடத் துணியாத தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு விமரிசனம். ஆனால் விலை மதிப்பற்ற விமரிசனம். அந்த விமரிசனத்தின் மதிப்பறிந்தவர்கள் தங்கள் மீது சுயவிமரிசனம் செய்து கொள்ளட்டும்.

மூவர் தூக்கிற்கு காரணமான பாசிச காங்கிரசு அரசு, பாசிச ஜெயா, அநீதியான நீதிமன்றங்கள் மீதான நமது போராட்டம் மக்கள் அரங்கில் தொடரட்டும். செங்கொடி எனும் அந்த இளம்பெண்ணின் உயிரை இனி மீட்க முடியாது. ஆனால் அந்தப் பிஞ்சு உள்ளம் கவலைப்பட்ட சூழ்நிலையையாவது மாற்றுவோம்.

தோழர் செங்கொடி சென்று வாருங்கள், உங்களைப் புரிந்து கொண்ட தோழர்கள் பலர் இங்கிருக்கிறார்கள், உயிரைக் கொடுத்து நீங்கள் எழுப்பியிருக்கும் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்ற போராடுவார்கள். உங்கள் தீக்குளிப்பு அந்தப் போராட்டத்தின் மீது ஒரு நெருப்பாய் பற்றவைக்கும், போய் வாருங்கள்!

http://www.vinavu.com/2011/08/29/senkodi/

மூன்று தமிழர் உயிர் காக்க … மும்பையில்


ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக் கோரி மும்பையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெட்டது,மும்பையுள்ள பல்வேறு சமூக அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை செய்தனர் .

இதேவேளை மூவரின் விடுதலையை வலியுறுத்திய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

* மும்பையில் தமிழர் பாதுகாப்பு குழு சார்பாக , பேரறிவாளன் ,முருகன்,சாந்தன் ஆகியோரின் துக்கு தண்டனை ரத்து செய்யகோரி மும்பை விடி ஸ்டேஷன் முன்பு ஆர்பாட்டம் நடந்தது .

கப்டன் தமிழ் செல்வன் தலைமை தாங்க ,நாடோடி தமிழன் ,மா.கதிரவன் ,அ.கணேசன் ,சௌந்தராஜன் ,சரவணன் ,சந்திரசேகர் ,பிரான்செஸ் ,ஆகியோர் என பெரும் திரளாக தமிழர்கள் கலந்து கொண்டனர்கள்

* தோழர் செங்கொடி க்கு வீர வணக்கம் நிகழ்வு செம்பூர் இல் நடந்தது ..இதில் மா.கதிரவன் ,நாடோடி தமிழன் ,இரைசா .ராஜேந்திரன் ,சரவணன் ,செயலரசன் ,பிவாண்டி பாலா ,மு.முருகன்,ஆதி ,வருண் ,கென்னடி , ஆகிய தோழர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்

இன்னும் தொடரும் …

மும்பை யில் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பு

மும்பை யில் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பு
………………………………………………………….

இலங்கையில் கடந்த அறுபது ஆண்டுகாலமாக தமிழர்கள் அனைத்து வகையிலும் மிகப்பெரிய ஒதுக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் சந்தித்து வருகிறார்கள். அதில் முதல் 30 ஆண்டுகள் அறவழிப்போராட்டாம் தந்தை செல்வா தலைமையில் முன்னெடுக்கப்பட்டு. அகிம்சை முறையில் போராடி வந்த தமிழ் மக்கள் சிங்கள பேரினவாத அரசால் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். தொடர் ஒடுக்குமுறையால் அங்கு உள்ள தமிழ் மக்கள் இரண்டு முடிவுக்கு வரவேண்டியதாயிற்று, ஒன்று இனியும் இலங்கையை ஆளும் சிங்கள பேரினவாத அரசின் கீழ் ஒரு தீர்வையும் எட்ட இயலாது, மற்றொன்று ஆயுதம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கும் அரசுடன் அமைதி வழியில் போராட இயலாது.

1983 கறுப்பு யூலை படுகொலைக்குப் பிறகு இளைஞர்கள் தனிஈழக் கோரிக்கையுடன் ஆயுதம் ஏந்தி போராடத் தொடங்குகிறார்கள். இதன் தொடர்ச்சியாக போராளிகள் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒடுக்குமுறை அரசிற்கு எதிராக ஆயுதம் கொண்டு பல வெற்றிகளை குவித்தனர். இந்நிலையில் 2001ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு உலக அரசியல் அரங்கில் ஏற்பட்ட மாற்றம் உலகில் ஆயுதம் கொண்டு போராடும் அனைத்து அமைப்புகளுக்கும் பயங்கரவாத முத்திரைக் குத்தப்படுகிறது, அதில் விடுதலைப் புலிகள் அமைப்பும் பயங்கரவாதிகள் என்று முத்திரைக் குத்தப்பட்டு தடைசெய்யப்படுகிறது.

அதன் பிறகு புலிகள் அமைப்பு பேச்சுவார்த்தைக்கு அமர்கிறது, ஆயினும் சிங்கள பேரினிவாத அரசு எந்த ஒரு தீர்வையும் அடைவதற்கு தயாரக இல்லை. இறுதியில் 2004ஆம் ஆண்டு இலங்கை அரசு பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு தாக்குதலை தொடங்கியது. இடைப்பட்ட காலக்கட்டத்தில் அரச கட்டுப்பாட்டில் இருந்த தமிழர் தாயக பகுதிகளில் இராணுவத்தை நிலைப்படுத்தி அதன் துனைக்கொண்டு சிங்களர்களை குடியமர்த்தினர். புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீது பொருளாதாரத் தடையை நிறுவுகிறது. இந்நிலையில் உலக வல்லாதிக்க நாடுகளின் ஆதரவுகளைத் திரட்டி அவர்களின் நேரடி உதவியோடும் இந்திய அரசின் முழுப் பங்களிப்போடும் “பயங்கரவாத்த்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் தனது இன அழிப்புப் போரை தொடங்கியது சிங்கள பேரினவாத அரசு. அங்கு நடக்கும் படுகொலைகள் உலகத்தார் கண்களுக்கு தெரியாதவன்னம் சர்வதேச ஊடகங்களையும், தன்னார்வ அமைப்புகளையும் போர்ப்பகுதியைவிட்டு வெளியேற்றியது.

இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு பல்முனைத் தாக்குதல்களை தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு தொடுத்த்து, இதற்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பை நல்கியதுடன் இரசாயன ஆயுதங்கள் கொடுத்து, உளவு வேலைகளைப் பார்த்து மிகப்பெரிய அழிவுக்கு காரணமாக நின்றது. இப்படி இலங்கை அரசு இந்தியா மற்றும் உலக நாடுகளுடன் இனைந்து நடத்திய இன அழிப்பு போரில் 4 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். புலிகள் தங்கள் ஆயுதங்களை மவுனிக்க செய்கிறோம் என்று கூறிய பிறகு மே 17, 18ல் மட்டும் 50,000த்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இப்படி மிகப் பெரிய இன அழிவை ஏற்படுத்திய போர் முடிவுக்கு வந்த பின்னாளில் எஞ்சிய 3லட்சத்திற்கும் மக்களை எந்தவொரு அடிப்படை வசதிகளும் அற்ற முல்வேளி முகாம்களுக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்த்து. மேலும் அங்கு அடைபட்டுகிடந்த பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர். இளைஞர்கள் கட்த்தப்பட்டு கொல்லப்பட்டனர்.

இத்தனை அநியாயங்களையும் கைகட்டி வேடிக்கை பார்த்து வந்த சர்வதேச சமூகம், இன்று திரும்பி பார்க்கத் தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில் ஐ.நா. சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்க் குழு போர்க்குற்றம் குறித்தான ஆய்வை மேற்கொண்டு பல சாட்சியங்களை சந்தித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மிக்க் கொடூரமான போர்க்குற்றங்கள் நடபெற்றுள்ளது என்று ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. அது இன்றியும் அயர்லாந்து நாட்டில் டப்லின் மாகானத்தில் கூடிய தீர்ப்பாயம் அங்கு இனப்படுகொலை நடந்ததற்கான அனைத்து கூறுகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த சூழலில் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை மற்றும் டப்லின் தீர்ப்பாயத்தின் அடிப்படையிலும் இலங்கையில் ஒரு நீதி விசாரனை நட்த்தப்பட வேண்டும் என்பதை முன்னிறுத்தி இன்று நாம் செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்த செயல்பாடு என்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்காக மட்டுமின்றி, இது போன்று உலகில் எந்த ஒரு பகுதியிலும் இனப்படுகொலை நடக்காதவன்னம் தடுப்பதற்காகவும் இருக்க வேண்டும்.
இதனை நோக்காக கொண்டு ஒரு தொடர்ச்சியான செயல்பாடுகளை மேற்கொள்வத்ற்காக “போர்க்குற்றம் – இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள்” என்ற ஒரு பொது தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தின் வாயிலாக நாம் அனைவரும் கைகோர்த்து ஒரு நீதிக்கான போராட்டத்தை தொடங்க வேண்டியுள்ளது. அப்போராட்ட்த்தின் வாயிலாக இந்திய அரசு தொடர்ந்து இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படுவதை தடுத்து நிறுத்தி, சிங்கள பேரினவாத இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரனையை நட்த்த வலியுறுத்த வைக்க வேண்டும். அது நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்தால் தான் முடியும். நாம் அனைவரும் கைகோர்த்து நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்ப்பது மட்டுமல்லாது; நடக்கப்போகும் இனப்படுகொலைகளையும் தடுத்து நிறுத்துவோம்
இதன் தொடர்ச்சியாக கையெழுத்து இயக்கம் மும்பையிலும் தொடங்கபட்டது ..தமிழர்கள் பெருவாரிய வசிக்கும் பகுதிகளளில் கையெழுத்து வாங்கபட்டது..அதோடு மும்பையில் சமுக ஆர்வலர்களிடம் வாங்கபட்டது ..

முதலாவதாக முன்னால் நீதிபதி ஹோசபர்ட் சுரேஷ் கையொப்பமிட்டார்..

மனித உரிமை போராளி ,பெண் பத்திரிகையாளர் தீஸ்த்த செடல்வாத் கையொப்பமிட்டார்..

மனித உரிமை ஆர்வலர் ஆனந்த் டெல்டும்ப்டே கையொப்பமிட்டார்..மேலும் பல சமுக ஆர்வலர்களிடம் கையொப்பம் வாங்கும் பணி நடக்கிறது ..இதில் பெரியார் திராவிடர் கழக மா.கதிரவன் ,உலக தமிழர் பேரமைப்பு நாடோடி தமிழன் ,பிவாண்டி பாலா ,இறை .ச. ராஜேந்திரன் ஆகியோர் ஈடுப்பட்டுவருகிறர்கள்..மேலும் செய்திகளோடு விரைவில் உங்களிடையே ..

நாட்டின் ஜனத்தொகையில் பாதிபேர் பட்டினியால் வாடுகிறார்கள் மும்பையில் பினாயக் சென் பேச்சு ..

நாட்டின் ஜனத்தொகையில் பாதிபேர் பட்டினியால் வாடுகிறார்கள்
மும்பையில் பினாயக் சென் பேச்சு ..

நக்ச்சளைட்களுக்கு உதவி செய்ததற்காக தேசவிரோத குற்றச்சாட்டில் கீழ் தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர் பினாயக் சென் உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 15 தேதி இவரை ஜாமீனில் விடுதலை செய்தது ,

இந்த நிலையில் மும்பையில் நடந்த கருத்தரங்கத்தில் கலந்து பேசினார் :

அரசு புள்ளிவிபரங்களின் படி இந்தியா மக்கள் தொகையில் வயது வந்தோரில் 37 சதவிதம் பேர் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் ..

இதே போல் 47 சதவீதம் குழந்தைகளும் ஊட்டச்சத்ன்மையால் பாதிக்கபட்டுள்ளனர் ,நாட்டின் பழங்குடியினரில் 50 சதவிதத் தினரும் ,தாழ்த்தபட்ட வகுப்பினரில் 60 சதவிதத்தினரும் பட்டினி சூழ்நிலையில் வசித்து வருகின்றனர்

.பொதுவான சொத்துவளங்கள் தங்களுக்கு கிடைப்பதால்தான் இவர்கள் உயிர் பிழைத்து இருக்கிறார்கள் அவையும் கூட தற்போது பறிக்கபட்டுவருகின்ற்றனர்,

இந்தியாவின் மேட்டுக்குடியினர் வெளியே இருந்து சுரண்டுவதற்கு எதுவும் இல்லாதலால் இப்போது உள்ளேயே சுரண்டப்பார்கிறாக்கள் .

மனித உரிமை ஆர்வலர்கள் என்ற முறையில் இந்தியா அரசமைப்பு சட்டத்தை மதிக்கிறோம் எனினும் வன்முறையை கையில் எடுக்க அரசுக்கு சட்டபூர்வ உரிமை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளமாட்டேன் ” இவ்வாறு பினாயக் சென் பேசினார்

இந்த கருத்தரங்கத்தில் மனித உரிமை ஆர்வலர் பிளேவிய ஆக்னஸ் ,மிகீர் தேசாய் ,பினாயக் சென் மனைவி இலியானா ஆகியோர்

உடன் பெரியார் திராவிடர் கழக மா.கதிரவன் கலந்து கொண்டனர்

விடுதலை புலிகள் இந்தியாவிற்கு எதிராக செயல்படவில்லை .. -மும்பையில் பழ.நெடுமாறன் பேச்சு

விடுதலை புலிகள் இந்தியாவிற்கு எதிராக செயல்படவில்லை ..
-மும்பையில் பழ.நெடுமாறன் பேச்சு
……………………………………………………………..

மும்பை சியன் கொலிவடவில் தமிழர் பாதுகாப்பு குழு சார்பில் நடந்த ஐநா சபையால் போர் குற்றவாளியாக அறிவிக்கபட்ட ராஜபக்ஷேயை கைது செய்ய கோரி மாபெரும் பொது கூட்டத்தில் பழ.நெடுமாறன் பேசினார் :

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டு 21 நூற்றாண்டில் மிக பெரிய இனப்படுகொலையாகும் ..இந்த இனபடுகொலைக்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை இந்தியாவும் ,சீனாவும் பாதுகாத்து வருகின்றனர் .இலங்கையில் முகாம்களில் அடைத்து வைக்கபட்டுள்ள தமிழர்களை உடனே அவர்களது சொந்த ஊரில் குடியமர்த்த வேண்டும் இலங்கையில் விடுதலை புலிகள் இருந்தவரை சீனாவால் நுழைய முடியவில்லை ,ஆனால்

இந்தியாவின் அச்சுறுத்தலுக்க சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் இருந்து வருகிறது ,விடுதலை புலிகள் ஒருபோதும் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டுதில்லை ஆனால் முன்னால்
பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் நாட்டின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டும் தீவிரவாதத்தை கருத்தில் கொண்டும் புலிகளுக்கு எதிரான போக்கை இந்தியா கடைபிடித்தாக தெரிவித்துள்ளார் ,ஆங்கிலேயர்களால் விடுதலைக்கு போராடிய சுபாஷ் சந்திரபோஸ் ,பாகத் சிங் போன்றவர்கள் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டனர் இப்போது இனவிடுதலைக்க போராடும் விடுதலை புலிகளை தீவிரவாதிகள் என்று இந்தியா கூறிவருகிறது

உலக நாடுகள் ஒன்றிணைந்து ராஜபக்ஷே மீது நடவடிக்கை எடுக்க தமிழர்கள் அனைவரும் வலியுறுத்த வேண்டும் இலங்கையில் தமிழர்களை கொத்து,கொத்தாக கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை ஐ நா போர் குற்றவாளியாக அறிவித்துள்ளது .தமிழர்கள் மீது ஈவு ,இரக்கமின்றி இனவெறி தாக்குதல் நடத்திய ராஜபக்ஷேவை சர்வ தேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்துவதற்காக இந்த கூட்டம் கூட்டபட்டுளது .ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க ஒவ்வொரு தமிழனும் எழ வேண்டும் .

மேலும் முள்வேலி முகாமில் சிக்கி தவிக்கும் பெண்கள் ,குழந்தைகள் மற்றும் நம் தமிழ் இனத்தை மீட்டு எடுக்க ஐ நா படை தனது குழுவினை அனுப்பி நடவடிக்கை எடுக்கவேண்டும் .இதுவே நம்முடைய முக்கிய கோரிகையகையாக இருக்க வேண்டும் ” என்று பேசினார் ..இக்கூட்டத்தில் உலக தமிழர் பேரமைப்பு ,தமிழர் நட்பு கழகம் ஆகிய அமைப்புகள் கலந்துகொண்டனர்

தமிழர் இனவழிப்பு நாள்


:!!: விடுதலை என்ற இலட்சியப் பயணத்தில் நாம் ஓய்ந்துவிடப் போவதில்லை – விடுதலைப்புலிகள் :!!:

மே 18 , தமிழீழ தேசிய துக்க நாள்

மும்பையில் மத்தியாமைச்சர் ஜெயராம் ரமேஷ் க்கு கடும் எதிர்ப்பு

மும்பையில் மத்தியாமைச்சர் ஜெயராம் ரமேஷ் க்கு கடும் எதிர்ப்பு
ஜைதபூர் அணுமின்நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியாமைச்சர் ஜெயராம் ரமேஷ் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை டாட்டா இன்ச்டிடுடே ஒப் சோசியல் ச்சிஎன்செஸ் மாணவர்கள் புறகனிததனர்கள்..இன்ச்டிடுடே க்கு வெளியே சமுகா ஆர்வலர்களும் ,அணுமின்நிலைய எதிர்பாளர்களும் பெரும் திரளாக கூடி எதிர்ப்பு தெரிவித்தனர்கள் ‘ஜைதபூர் திட்டத்தால் கொங்கன் பிராந்தியமே நாசமாகிவிடும் என்பதால் அணுமின் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் ‘என்று கோஷமிட்டனர் ..வாளகத்தின் உள்ளே சுமார் மாணவர்கள் பட்டமளிப்பு நிகழ்சியை புறகணித்துவிட்டு ‘நாகோ அநோஉர்ஜ ‘ வேண்டாம் அணுசக்தி என்ற ட்ஷிர்ச்ட் அணிந்து இருந்தனர் ..வெளியே அணுமின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ,பேன்னர்,எந்தி கொண்டு திட்டத்திற்கு எதிராக கோஷமிட்டனர்..இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது …

மத்தியாமைச்சர் ஜெயராம் ரமேஷ்

தோழர் கமயாணி ,மா.கதிரவன் [பெ.தி .க ]மற்றும் தோழர்கள்

‘நாகோ அநோஉர்ஜ ‘ வேண்டாம் அணுசக்தி என்ற ட்ஷிர்ச்ட் அணிந்து இருந்தனர்

மத்தியாமைச்சர் ஜெயராம் ரமேஷ் வரும் போது

தோழர் கமயாணி ,மா.கதிரவன் [பெ.தி .க ]மற்றும் தோழர்கள்

குறும்பட இயக்குனர் ஆனந்த் பட்வர்தன் உடன்

விஞ்சானி கோபால்[சென்னை ] அவர்களின் தந்தையரும் களத்தில்;

களத்தில்;

களத்தில்;

என்றும் களத்தில் தோழர்கள்

இருட்டில் ஒரு மேடை -நாடகம்

இருட்டில் ஒரு மேடை -நாடகம்
கிரீன் ஹன்ட் என்ற பெயரில் ஆதிவாசிகளின் நிலங்கள்,கனிமவளங்கள் கொள்ளை பொகுவதை
தடுத்துநிறுத்த போராடும் மனித உரிமையாளர்கள் ,சிந்தனையாளர்கள் ,கள பணியாளர்கள் ஆனைவரையும் நக்சல்பாரிகள் என்று ஒற்றை பெயரில் கைது செய்கிறது அரசு பயங்கரவாதம் ..இதன் தொடர்ச்சிதான் டாக்டர் பினாயக் சென் கைது ,இதேபோல் மகாராஷ்டிரா வில் உழைக்கும்
மக்களுக்கு போராடும் தோழர் சுதிர் தவளே அவர்களை ஜனவரி 5 தேதி நந்தேட் மாவட்டத்தில் நடந்த புலே -அம்பேத்கர் சகித்தய விழாவில் கலந்துகொள்ளும் பொது நக்ளைஸ்ட் க்கு ஆதரனவர் என்று கைது செய்து ராஜதுரோகம் வழக்கு போட்டது ..இதுவரை குற்றம் நிருப்பிக்கவில்லை …இத்தகைய செயலை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்பாட்டம் ,கூட்டம் நடக்கிறது

பத்திரிகையாளர் ,கள பனியாளர்,வித்தொரோகி இதழ் ஆசிரியருமான ,சிந்தனையளுமான தோழர் சுதிர் தவளே அவர்களை விடுதலை செய்யவேண்டி ‘சுதிர் தவளே முக்கதாதா அபியான் ‘[சுதிர் தவளே விடுதலை இயக்கம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்த நாடகம் 'மனச் அன்தேறேமே [இருட்டில் ஒரு மேடை ] மும்பை ,தாதர் கிழக்கில் டாக்டர் அம்பேத்கர் முக் நாயக் [ஊமைகளின் தலைவன் ]பத்திரிக்கை நடத்திய ஆலுவலக வளகத்தில் அமைந்தூல்ல அம்பேத்கர் பாவண் யில் நடந்தது ..அரசு பயங்கரவாத்தை தோலுரித்து மிக அருமையான நாடகத்தின் காட்சிகள்இதில் தோழர்கள் மா.கதிரவன் [பெ.தி.க ] தலித் எழுத்தாளர் ஜே. வி.பவர் ,வழ. சொனபார் , என
பலர் கலந்துகொண்டனர்கள் ..

நாடகத்தின் காட்சிகள்-1

நாடகத்தின் காட்சிகள்-2

நாடகத்தின் காட்சிகள்-3

நாடகத்தின் காட்சிகள்-4

நாடகத்தின் காட்சிகள்-5

நாடகத்தின் காட்சிகள்-6

தோழர்கள்

தோழர் சுதிர் தவளே மனைவி தர்சன அவர்கள் நாடகத்தை பற்றி கருது சொன்னார்

கார்ல் மார்க்ஸ்– வாழ்க்கை வரலாறு

கார்ல் மார்க்ஸ்– வாழ்க்கை வரலாறு


பிறப்பு: 05-05-1818.

தந்தை: ஹெர்ஷல் மார்க்ஸ்.: தாய்: ஹென்ரிட்டா.
பிறந்த இடம்: பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் நடுவில் உள்ளது ரைன் நதிக்கரை. அந்த நதிக்கரையின் அருகில் உள்ள ட்ரையின் நகரத்தின் பிராக்கன்ஸ் வீதி – 664 இலக்கமிட்ட வீடு.மதம்: யூத மதம்.சொந்த நாடு: பிரெஞ்சு.பிறந்து வளர்ந்தது: ஜெர்மன்.உடன் பிறந்தவர்கள்: 8 பேர்.

தந்தையை பற்றி: சாதாரணமான வக்கீலாக இருந்து குடும்ப வறுமை காரணமாக ப்ராட்டஸ்டன்ட்டுக்கு மதம் மாறியவர்.பள்ளி படிப்பு ஆரம்பித்த காலம்: 12 வயது.பள்ளி படிப்பு முடித்த காலம்: 25-08-1835.

கல்லூரி வாழ்க்கைத் தொடக்கம்: பான் பல்கலைக்கழகம், வக்கில் படிப்பு(தந்தையின் விருப்பத்திற்காக)கல்லூரி வாழ்க்கை: பான் நகரில் சமூக ஒழுக்கக்கேடாக கருதப்படும் குடிகாரர்கள் சங்கத்தில் உறுப்பினராகி, ஒரு கட்டத்தில் அந்தச் சங்கத்துக்கே தலைவராகவும் மாறினார்.கல்லூரி இறுதி வாழ்க்கை: தனது ஒழுங்கீனமான வாழ்க்கைக்கு காரல் மார்க்ஸின் தந்தையால் முடிவு எழுதப்பட்டது.

காதல் வாழ்க்கை:
காதலியின் பெயர்: ஜென்னி வான் வெஸ்ட் ப்ளான்.காதலியிடம் இரசித்தது: உலகின் மிகச்சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அது கூட தோற்றுப்போகும் அவளிடம்! ஓர் எரி மலையின் இதயத்தில் வாடாத மலராக…

காரல் மார்க்ஸின் தோற்றம்: காணச் சகியாத தோற்றம், கண்கள் மட்டுமின்றி அவரது கேசம், தோலின் நிறம் எல்லாமே கறுப்பு. ஜெர்மானியர்கள் வெறுப்புடன் நோக்கும் யூத இனத்தைச் சேர்ந்தவர்.ஜென்னியின் தோற்றம்: ரைன் லாந்தின் மிகச் சிறந்த அழகி. பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜெர்மானிய பெண்.காதல் உருவாக்கம்: ஷேக்ஸ்பியரின் இரசிகரான இவர் அவரது கவிதைகள் அனைத்தையும் மனனம் செய்தவர். ஜென்னியின் தந்தை லுட்விக் மற்றும் மார்க்ஸ் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை உரக்கப்பாடி வியந்து பேசுவார்கள். ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பும். தன்னையும் மீறி மார்க்ஸினுலிருந்த கவிதாவேசம் பீறிட்டெழும். இதுவே ஜென்னி மார்க்ஸின் மீது காதல் வயப்பட்டதற்கு காரணமாக அமைந்தது.ஜென்னி இரசித்த ஆணின் அழகு: அகங்காரமற்ற அறிவும் தன்னலமற்ற தியாகமும் பெண்களை மதிக்கும் சுபாவமுமே ஓர் ஆணின் அழகு!!!மார்க்ஸின் கூற்று: ஜென்னி எனும் ஒரு அசாதாரணமான பெண் தன் வாழ்வில் வர வேண்டுமென்றால், தானும் தனது வாழ்க்கையும் அசாதாரணமானதாக இருக்க வேண்டும் எனும் எண்ணம். இதுவே அவர் படித்து டாக்டர் பட்டம் பெறுவதற்கான மூல காரணம்.

இரண்டாவது கல்லூரி வாழ்க்கை:
ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக் கழகத்தில் தத்துவம் படிக்க ஆரம்பித்தார். அந்த பல்கலைக் கழகத்தில் “ஆய்வு மாணவர்கள்” என்ற ஒரு சங்கம் நிறுவி காரசாரமாக வரலாறு மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதித்தார். முதல் நாள் சங்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மறுநாள் அவரின் பதிலால் எதிரிகள் வாயடைத்து நின்றனர். தொடர்ந்து அவருக்குள் பெரும் அறிவுத் தீ, படித்து களைத்து உறங்காத விழிகள், வாராப்படாத கேசம், தாடியை நீவி விட்டுக் கொண்டு மாணவர்கள் புடை சூழ வருவது, பல்கலைக்கழக வராந்தாவில் ஒரு சிங்கம் போல் நடந்து வருவது போன்றவை பல்கலைக்கழகமே அவரைப்பற்றி பேச வைத்தது. தொடர்ந்த படிப்பின் ஆர்வம் காரணமாக ஜென்னியைப் பற்றியே மறக்க வைத்தது. ஜென்னியின் காதல்:“என் மகன் உனக்கு உகந்தவன் அல்ல” மற்றும் “நீ அவனை மறந்து விடு” போன்று மார்க்ஸின் பெற்றோர் கூறிய வார்த்தைகள் அவளை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது. இந்த சூழ்நிலையில் அவருக்கு ஒரு காதல் கடிதம் மார்க்ஸிடம் இருந்து வந்தது. அதை அவள் தன் விரல்கள் நடுங்க எடுத்து பார்த்தாள். கண்ணீர் ததும்பியதால் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்தன. அவள் கண்களில் இருந்து “மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுத்தன” . அவற்றிற்கு காரணமான வரிகள் “இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி… ஜென்னி என்றால் காதல்….”

தொழில்:
பட்டப்படிப்பை முடித்து ரைன் கெஜட் என்ற பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்நது பத்தே மாதத்தில் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மார்க்ஸின் எழுத்துக்கள் ஜெர்மானியரின் மத்தியில் நம்பிக்கையின் வெளிச்சத்தை ஏற்றத் துவங்கின. பத்திரிக்கையின் வியாபாரமும் சடசடவென எகிற ஆரம்பித்தது.

திருமண வாழ்க்கை:
ஜென்னிக்கு 29 வயதாகி விட்டது. தனது இளமையின் பாதி வாழ்க்கையை தூய காதலின் பொருட்டும், அவரது கனவாம் உலக மக்களின் நன்மைகளின் பொருட்டம் தியாகம் செய்து இருந்தாள். அதன் முடிவாக 1843ம் ஆண்டு ஜீன் 19ம் நாள் காரல் மார்க்ஸ் ஜென்னி என்ற இரு இதயங்கள் இணைந்தன. அந்த திருமணம் எளிமையுடனும், அழகுடனும் நடந்தேறியது. அவர்கள் திருமணத்துடன் அவர்கள் அறியாமலேயே இன்னும் இரு சம்பவங்கள் நிகழ்ந்தன.

1. உலகின் தலைசிறந்த காதலுக்கான இலக்கண புத்தகம் மூடிவைக்கப்பட்டது.

2. உலகின் தலைசிறந்த குடும்ப வாழ்க்கைக்கான புத்தகம் திறக்கப்பட்டது.

தொழில் புரட்சி: உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளன் என்பவன் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவனே! அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொழிலாளர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும் என மார்க்ஸ் ஆணித்தரமாக கூறியதோடு இல்லாமல், அவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கினார். இதைப்பற்றி அவர் எழுதிய பத்திரிக்கையின் பெயர்தான் “முன்னேற்றம்”. இதன் காரணமாக “முன்னேற்றம்” பத்திரிக்கை தடை செய்யப்பட்டது. ஜெர்மன் அரசு மார்க்ஸை நாடு கடத்த உத்திரவிட்டது. அப்போது அவருக்கு “ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் தரப்பட்டது. ஒரே ஒரு வார்த்தை… அந்த வார்த்தையை மட்டும் அவர் சொல்லிவிட்டால் போதும் அவர் எந்தத் தடையும் இல்லாமல் வாழலாம் அந்த ஒரு வார்த்தை… மன்னிப்பு”!!!

நாடு மாற்றம்: சீறிப்பாயும் ஏவுகணைக்குப் பின்னால் பாயும் நெருப்பைப் போல், மார்கஸின் பின்னிருந்து இயக்கிய சொல் புரட்சி. சில நாட்களிலேயே மார்க்ஸ் குடும்பத்துடன் பெல்ஜியம் வந்து குடியேறினார். “பெல்ஜியம் அரசு நடுங்க ஆரம்பித்து. 27வயதே ஆன இளைஞன் ஒருவனைப் பார்த்து ஒரு நாடே பயந்தன என்றால் இந்த இளைஞனின் எழுத்தும் சிந்தனையும் எத்தகைய வீரம் உடையதாக இருக்கும். “நீங்கள் பேனாவைத் தொடக்கூடாது மீறினால் சிறையில் தள்ளுவோம்” என எச்சரித்தது.

கம்யுனிஸ்ட்கள்: இந்த சூழ்நிலையில் ஒத்த கருத்துக்களை உடைய நெசவுத் தொழில் அதிபர் மகனான ஏங்கல்ஸ் மார்கஸ் உடன் சேர்ந்தார். இவர்கள் இருவரின் இணைவு “உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதாலாளித்துவத்துக்கு எதிரான சக்தியாக ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது”. அதன் பெயர் தான் “பொதுவுடமைச் சங்கம்”. இதில் தொழிலாளர்கள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என அழைத்துக் கொண்டனர்.

இதன் பிண்ணனியாக “லண்டன் மாநகரத்தில் பிரமாண்டமான நட்சத்திரமாக உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்த முதல் கம்யூனிஸ்ட் சங்கம் உதயமானது”. அதைத் தொடர்ந்து ஐரோப்பா முழுக்க தொழிலாளர்களிடையே உற்சாக ஊற்றைக் கிளப்பிய கம்யுனிஸ்ட் அடுத்த வருடமே இரண்டாவது மாநாட்டை லண்டனில் கூட்டியது. தங்களது புகழ்ச்சிக்கர எண்ணங்களால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின இதயங்களில் மார்க்ஸீம் ஏங்கல்ஸீம் பிதாமகன்களாக உருவெடுத்தனர்.

இதன் விளைவாக, 1848ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதியன்று பாரீஸ் நகரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மன்னன் லூயி பிலிப் தப்பியோடினான். அப்போது மார்க்ஸ் இருந்த பெல்ஜியம் நாட்டின் மன்னன் தன் பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டான். அதே நேரத்தில் மார்க்ஸீம் அவரது மனைவியும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜென்னியை அந்த நாட்டின் “தேக விற்பனை பெண்” கைதிகளுடன் அடைத்தனர். அந்த இரவு அவளுக்கு நரகமாக இருந்தது. 24மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இவ்வாறு பல முறை பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் இத்தாலி என்று நாடு கடத்தப்பட்டார். அப்போது அவர் கூறியது,

“எல்லா நாடும் என் நாடே!
எல்லா மக்களும் என் மக்கள்!!
நானோர் உலக மகன்

சோதனைக் காலம்: வாழ்க்கையில் சோதனைகள் வரும். ஆனால், சோதனைகளிலேயே வாழ்க்கை ஓடினால் என்ன ஆகும்? மார்க்ஸின் வரலாற்றுப் பாதையில் என்றேனும் ஒரு அடி… ஓரே ஒரு அடி… “சலிப்பின் காரணமாக ஜென்னி பின் வாங்கியிருந்தால் கூட உலக வரலாறே திசை மாறியிருக்கும்”.

இறுதியாக மார்க்ஸ் தனது புகலிடமாக இலண்டன் வந்தார். உலகின் பணக்கார நாடான இலண்டனில் அவர்க்கு பிரச்சனை வீ்ட்டுக்குள்ளயே முளைத்தது. பசி என்ற இரண்டு எழுத்து அவரது வீட்டினுள் நுழைந்தது. அப்போது அவருக்கு நான்கு குழந்தைகள் முதல் இரண்டு பெண் குழந்தைகள் பசி என்றால் நன்கு அறியும் வயது. குழந்தைகளுக்கும், மார்கஸீக்கும் பரிமாறி விட்டு பட்டினி கிடக்க ஆரம்பித்தாள் ஜென்னி. இதனால் ஜென்னியின் தனங்களில் பால் வற்றத் துவங்கியது. ஒரு காலக் கட்டத்தில் தனங்கள் சுருங்கி இரத்தம் கசிய ஆரம்பித்தது. அன்று இரவு மார்க்ஸின் வீட்டில் குழந்தை அழும் சத்தம் மட்டும் இல்லாமல் பிரபு குடும்பத்தில் பிறந்த ஜென்னியின் அழுகை சத்தமும் சேர்ந்து ஒலித்தது.

இதற்கிடையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கொடுமைக்கார எஜமானியால் விட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் ஜென்னியின் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் அபகரித்தனர். இந்த “பெருங்கொடுமை கொலை வெறியோடு அவர்களது மூன்று குழந்தைகளையும் தின்று தீர்த்தது”. இதை விட ஒரு கொடுமை உலகில் எந்த ஒரு மனிதருக்கும் நேர்ந்திராது. இந்த கொடுமையான சமயத்தில் ஜென்னி கூறிய வார்த்தை, “என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை”.

தன் குடும்பம் பொருளாதார ரீதியாக பெரும் துயருற்ற இந்தக் காலக்கட்டத்தில் தான் “உலகத்தின் பொருளாதாரம்” பற்றி தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி வந்தார் மார்க்ஸ். 1867 செப்டம்பர் 14, உலகத் தொழிலாளர்களின் வாழ்வில் நிரந்தர விடிவெள்ளி முழுமையாக உதயமான நாள். மார்க்ஸ் எனும் இயந்திரத்தின் 15 ஆண்டுகளின் வியர்வை துளிகள் எழுத்துருக்களாகி காகிதங்களில் பிரசுரமாகி “மூலதனம்” எனும் புத்தகமாக வெளிவந்தது. வெளியான நாள் முதலே “மூலதனம்” உலகமெங்கும் பெரும் வரவேற்பைப்பெற்றது. இதைத் தொடர்நது மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் வெளியாயின. இன்றளவும் உலகின் தலைச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாக “மூலதனம்” கருதப்படுகிறது.

இந்த சமயத்தில் ஜென்னி தன் தாயின் இறப்பு காரணமாக ஜெர்மன் செல்ல வேண்டியிருந்தது. அப்போது அவர் மனைவியின் பிரிவை இவ்வாறு கூறினார்.

உன் பிரிவு எனக்குள் மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது. எனது சக்திகள் அனைத்தும் அதில் கரைந்து போவதை கண் கூடாகக் பார்க்கிறேன். ஒரே ஒரு முறை மீண்டும் உன்னை என் இதயத்தோடு அணைத்துக் கொண்டால் போதும் என் இதயம் அமைதியாகி விடும். அதன் பிறகு எனக்கு இந்த உலகில் எதுவும் வேண்டியிருக்காது.

மூலதனம் நூல்: உதாரணமாக நமக்கு ஒரு பென்சில் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நாமே சுயமாக உற்பத்தி செய்ய நீண்ட நேரமும் கடும் உழைப்பும் தேவைப்படும். ஆனால் இந்த தொல்லையே இல்லாமல், ஒரு விலை கொடுத்து அந்தப் பென்சிலை கடையிலிருந்து நாம் வாங்கிக் கொள்கிறோம். உண்மையில் நாம் பென்சிலை வாங்கவில்லை. அந்த பென்சிலை தயாரிக்கத் தேவைப்படும் “நம் உழைப்புக்கு பதிலாக இன்னொருவருடைய உழைப்புக்கு ஒரு விலை கொடுக்கிறோம். அவ்வளவு தான்!!!”. ஆனால் நாம் கொடுக்கும் இந்த விலை அந்தத் தொழிலாளிக்குச் சென்று சேர்கிறதா என்றால், இல்லை!!! பென்சில் தயாரிக்க மூலதனம் போட்ட காரணத்தால் பெரும் இலாபத்ததை அந்த முதலாளியும், பெரிய உழைப்பு இல்லாமல் அதை வாங்கி விற்கும் வியாபாரிகளுமே அதன் பலனை அனுபவிக்கினறனர்.

இது குறித்து எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அந்தத் தொழிலாளி அற்பப் பணம் கொடுத்துத் தன் உழைப்பைச் சுரண்டிக் கொடுக்கும் முதலாளியை கடவுளாக நினைத்து வணங்குகிறான். அதோடு மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட பென்சிலை பலரும் உற்பத்தி செய்து, வியாபாரத்தில் போட்டி ஏற்படுகிற போது அதைச் சரிகட்ட பென்சிலின் விலையைக் குறைக்கிறான் முதலாளி. அதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட தொழிலாளியின் தோளில் அதிகப்படியான உழைப்பை சுமத்தி அவர்களை முழுவதுமாக நசுக்க அரம்பிக்கிறான். இதைத்தான் மார்க்ஸ் தனது “மூலதனம்” எனும் நூலில் தெளிவுபடுத்தி தொழிலாளர்களின் வாழ்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்தார்.

பிடித்த விஷயம்: புகைப்பிடிப்பது, பால் கலக்காத கருப்பு காபி குடிப்பது மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி.

பிடிக்காத விஷயம்: பிச்சைப் போடுவது. “பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது எவ்வளவு மேலான விஷயம்”.

மனைவியின் இறப்பு: 1881ம் அண்டு, இரக்கமற்ற டிசம்பர் மாதத்தில், உலகத்துக் காதலையும், பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் கற்றுக் கொடுத்த ஜென்னி எனும் மலர் பூமியில் உதிர்ந்தது.

மார்க்ஸின் இறப்பு: 1883ம் ஆண்டு மார்ச் 14ம் நாள் பிற்பகல் 2.30 மணிக்கு படுக்கை அறையிலிருந்து படிக்கும் அறைக்கு நடந்த சென்று தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து தனது கைகளில் தந்தை, மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு கடைசி வார்த்தைகள் என எதுவும் சொல்லாமல் தனது 61வது வயதில் மக்கள் நலன் குறித்தே தன் வாழ்நாளையெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்த அந்த சிந்தனைச் சிற்பி பூரண அமைதிக்குள் ஆழ்ந்தார்.

“யூதனாகப் பிறந்தார்!
கிறிஸ்தவனாக வாழ்ந்தார்!!
மனிதனாக இறந்தார்!!!
காலங்கள் தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்…………….”.

மகாராஷ்டிரா மாநில ரத்னகிரி மாவட்டத்தில் ஜைதாபூர் ஆணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு

மகாராஷ்டிரா மாநில ரத்னகிரி மாவட்டத்தில் ஜைதாபூர் ஆணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமமக்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் தப்ரேஜ் பெஹேகர் என்ற வாலிபர் இறந்தார் ,இதை கண்டித்து மும்பை தாதர் ரயில் நிலையம் முன்பு ‘கொங்கண் பச்சாவ் சமிதி’ அமைப்பு ஆர்பாட்டம் நடத்தியது ,இதில் இடதுசாரி இயக்கங்கள் ,பெரியார் திராவிடர் கழகம் ,ரேபளிக்கன் பந்தர் ,ஆணுமின் நிலைய எதிர்ப்பவர்கள் என தோழர்கள் பெரும் திரளாக திரண்டனர் ,

மகாராஷ்டிரா மாநில ரத்னகிரி மாவட்டத்தில் ஜைதாபூர் ஆணுமின் நிலைய பதாகை

கிராமமக்கள் எதிர்ப்பு

ஆணுமின் நிலைய எதிர்ப்பவர்கள்

போலீஸ் ரவுடிசம் பொதுமக்கள் மீது

ஆணுமின் நிலையம்

மா.கதிரவன் .பெரியார் திராவிடர் கழகம் [மும்பை],தோழர்கள்

இடதுசாரி தோழர்கள்

மா.கதிரவன் .பெரியார் திராவிடர் கழகம் [மும்பை],தோழர்கள்

தோழர்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மும்பை தலைவர் பிரகாஷ் ரெட்டி மற்றும் தோழர்கள்

தோழர்கள்

Follow

Get every new post delivered to your Inbox.